கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பல தொழிற்சாலைகளால் காற்று மாசு அடைவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கும்மிடிப்பூண்டியில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பட உரிய இடத்தைத் தேர்வு செய்து பேரூராட்சியை குப்பைகளற்ற வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலக் காடுகளில் இருந்து வரும் மழைநீர் வீணாகக் கடலில் கடக்கிறது. அந்த நீரை சேமித்து விவசாயத்து பயன்படுத்தும் வகையில், மேற்கண்ட கால்வாயை தூர்வாரி 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் கும்மிடிப்பூண்டியில் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டியில் மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளரை பணியில் அமர்த்தி, அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கும்மிடிப்பூண்டி சிப்காட், சுற்றுப்புறப் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளால் காற்று மாசடைந்து சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறி வருகிறது. எனவே, காற்று மாசு கண்காணிப்பு நிலையம் அமைத்து, காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், நிலத்தடி நீர் குறைவுக்குக் காரணமான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்மிடிப்பூண்டியில் திறந்தவெளி, உள் விளையாட்டு அரங்கம் கட்டித்தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பால்சாமி, காந்தி உலக மையத்தைச் சேர்ந்த ரவி, மோகன்ராஜ், வெங்கடேஸ்வரலு உள்ளிட்ட பலர் இருந்தனர்