ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் ஊராட்சியில் பெரம்பூர், லட்சிவாக்கம்காலனி போன்ற பகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு லட்சிவாக்கம் பகுதியை சேர்ந்த சிலர் பெரம்பூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள காலி இடத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைப்பதற்காக கம்புகளை நட்டனர்.
இதை பார்த்த பெரம்பூர் கிராம மக்கள் அதை அகற்றும் படி கூறினர். அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மறியல்
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் திடீர் என்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, ராஜராஜன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கம், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர். இதனால் ஊத்துக்கோட்டை - பெரிபாளையம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.