குறுகலான நெருக்கடியான இடத்தில் இயங்கிவரும் ஊத்துக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு புதியக் கட்டடம் கட்டவேண்டும் என பொதுமக்களும், வழக்கறிஞர்களும் எதிர்நோக்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநில எல்லையில் ஊத்துக்கோட்டை நகரம் உள்ளது. ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி, எல்லாபுரம் ஒன்றியம், பூண்டி ஒன்றியத்தின் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும் இங்கு ஊத்துக்கோட்டை, பென்னலூர்பேட்டை, பெரியபாளையம், வெங்கல், ஆரணி ஆகிய காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகள் ஊத்துக்கோட்டை நீதிமன்ற எல்லையில்தான் வருகின்றன.
ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள குறுகலான இடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 6 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், காவலர்கள், பொதுமக்கள் தங்கள் பணிக்காக வந்து செல்கின்றனர்.
தனியார் கட்டடத்துக்கு மட்டும் வாடகையாக ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலுத்தப்படுகிறது.
போதிய வசதி இல்லாத குறுகலான இடத்தில் நீதிமன்றம் இயங்கிவருவதால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்படைகின்றனர்.
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகிலேயே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
அங்கு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்துக்கு என சொந்தக் கட்டடம் கட்டினால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டலாம். மேலும் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் மிகுந்த பயன்பெறுவர்.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊத்துக்கோட்டையில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment