கண்டலேறு அனையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.
கிருஷ்ணா நதி நீர்
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும். அதன்படி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி கால்வாயில் ஜனவரி மாதம் 13-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டனர். கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 5-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடும்படி கேட்டு கொண்டனர்.
தமிழக எல்லையை வந்தடைந்தது
அதன்படி கடந்த 26- ந் தேதி மாலை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டனர். முதலில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறந்து விட்டனர். பின்னர் படிப்படியாக அதிகரித்தனர். தற்போது வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு நேற்று காலை 6 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்தது. வினாடிக்கு 30 கனஅடி விதம் வந்து கொண்டிருந்தது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி நீர் தேக்கத்துக்கு இன்று காலை போய் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று மதியம் 12 மணிக்கு பூண்டி ஏரியில் 17.80 அடி நீர் மட்டம் பதிவானது. வெறும் 100 மில்லியன் கனஅடி நீர் மட்டும்தான் இருப்பு உள்ளது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயந்துள்ளது...