கண்ணன்கோட்டையில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டை பகுதியில் தமிழக அரசின் நீர்தேக்கத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதியினர் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
மேலும் எதிர்ப்பைக் காட்டும் விதமாக அப்பகுதியில் வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கண்ணன்கோட்டை பகுதியில் ரூ.330 கோடி மதிப்பில் நீர்தேக்கத் திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் அப்பகுதியில் 650 ஏக்கர் விவசாயப் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட இருப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனை கண்டித்து கிராமத்தினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையொட்டி மக்களிடம் அரசு தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இந்த கோரிக்கையை அரசு ஏற்காததால் கண்ணன்கோட்டை பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை கண்ணன்கோட்டை பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு குறித்து பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. மேலும் வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணன்கோட்டை பகுதிக்கு வருவாய்த்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment