அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மார்ச்.26-
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127ஏ-ன்படி தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பேனர் விளம்பரங்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மற்றும் வெளியீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி இடம்பெறாமல் அச்சிடக்கூடாது.
எந்த ஒரு அச்சக உரிமையாளரும் தேர்தல் தொடர்பான விளம்பரத்தினை அச்சிடும்போது வெளியீட்டாளரின் உறுதி மொழி பெறாமல் அச்சிடக்கூடாது. அந்த உறுதிமொழி பெறப்பட வேண்டிய படிவம் ஏ-வை நிரப்பி அதனை அவர் கையொப்பமிட்டு அவருக்கு தெரிந்த 2 பேர் சாட்சி கையொப்பமிட்டு அச்சகதாரரிடம் அளிக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான விளம்பரம் எந்த விதமான முறையில் நகல் எடுக்கப்பட்டாலும் அது அச்சிடப்படுவதாகவே கருதப்படும். அதற்கு அச்சிடுவதற்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் பொருந்தும். தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் (துண்டுபிரசுரம் மற்றும் சுவரொட்டிகள்) எனப்படுவது
அந்த விளம்பரத்தில் தேர்தல் நடைபெறும் நாள், நேரம், இடம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது பணியாளருக்கு வழக்கமான குறிப்புகள் அளிக்கும் விவரங்கள் அடங்கியதனை தவிர்த்து மற்ற அனைத்து தேர்தல் தொடர்பான விளம்பரங்களும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் எனப்படும்.
எந்த ஒரு நபரும் மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டுமோ விதிக்கப்படும்.
விளம்பரமானது சட்டத்திற்கு புறம்பானதாகவோ அல்லது எந்த ஓரு மதம், ஜாதி, இனம் மற்றும் மொழி ஆகியவற்றிற்கு எதிராகவோ அல்லது எந்த ஒரு தனிநபரின் பண்பினை குற்றம் சாட்டும் வகையிலோ இருக்க கூடாது. அச்சிடும் விளம்பரத்தின் 4 பிரதிகளுடன் வெளியீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட உறுதிமொழியுடன் சேர்த்து அச்சகத்தார் பி படிவத்தினை நிரப்பி கையொப்பமிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு விளம்பரம் அச்சிடப்பட்டதில் இருந்து 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எ.ஜி.செல்வமணி, நேர்முக உதவியாளர்கள் புவியரசு (கணக்கு), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வரதராஜன் (ஆவடி) மற்றும் அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment