திருவள்ளூர் வடமதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மகத்தான வெற்றி
2011–ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ, அதைவிட மகத்தான வெற்றியை நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கின்றேன். எனது வேண்டுகோளினை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு.
கருணாநிதி கட்டிய கட்டிடம்
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட சட்டசபைக்கான புதிய கட்டிடத்தை மருத்துவமனையாக அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது என்று கூறி, இது கருணாநிதி கட்டிய கட்டிடம் என்பதால் தான் மாற்றப்பட்டது என்று பொய் பிரசாரம் செய்துள்ளார்.
தமிழக அரசாங்கத்தில் 36 துறைகள் உள்ளன. கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்தில் வெறும் 6 துறைகளும், முதல்–அமைச்சர் உட்பட அமைச்சர்களின் அலுவலகங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. மீதமுள்ள 30 துறைகள் பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் செயல்பட்டு வந்தன. இதன் காரணமாக மக்களும் அரசு அதிகாரிகளும் புதிய தலைமை செயலக கட்டிடம், புனித ஜார்ஜ் கோட்டை என இரு இடங்களுக்கும் அலைந்து கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களின் அலுவலக அறைகள் மட்டுமே புதிய கட்டிடத்தில் இடம் பெற்றிருந்தன.
நீதிமன்றத்தில் வழக்கு
அந்த அமைச்சர்களின் துறை செயலாளர்களுக்கான அலுவலகங்கள் புதிய கட்டிடத்தில் இடம் பெறவில்லை. அரசு செயலாளர்களின் அலுவலகங்கள் மற்றும் துறைகளின் அலுவலகங்கள் பழைய புனிய ஜார்ஜ் கோட்டையில் தான் இருந்தன. அமைச்சர்கள் ஓர் இடத்திலும், அதிகாரிகள் வேறு இடத்திலும் என 2 இடங்களில் இருந்தால் தலைமை செயலகம் எப்படி செயல்பட முடியும்?. கருணாநிதி செய்த குழப்பத்தினால் அத்தகைய கேலிக்கூத்தான நிலைமை தான் நிலவியது.
எனவே தான், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்கள் பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை கட்டணம் ஏதுமின்றி பெறும் வகையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான பல துறை உயர் சிறப்பு மருத்துவமனையை அந்த புதிய கட்டிடத்தில் அமைக்க நான் உத்தரவிட்டேன்.
முதலில் இதை வரவேற்றார் கருணாநிதி. பின்னர், இந்த மருத்துவமனை வருவதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடும் செய்தார். கருணாநிதியின் கெடுமதி எண்ணத்தையும் மீறி, இந்த மருத்துவமனை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏழை, எளிய மக்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.
2 கட்டிடங்களில் இருந்து கொண்டு அரசு நிர்வாகத்தை நடத்தவே முடியாது என்பதால் தான் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமை செயலகம் இயங்கி வருகிறதே தவிர, கருணாநிதி கட்டிய கட்டிடம் என்பதால் புதிய கட்டிடத்தை புறக்கணிக்கவில்லை.
வாக்கு சக்தி படைத்தது
தற்போது, தேர்தல் சமயத்தில் இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற முயற்சியில் இதுபோன்ற பொய் பிரசாரத்தை கருணாநிதி செய்து வருகிறார். கருணாநிதியின் பொய் பிரசாரம் நிச்சயம் எடுபடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் பதவி முக்கியம் அல்ல
கடந்த ஒரு மாத காலமாக நான் மேற்கொண்டுள்ள சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் அலை கடலென திரண்டு வருகிறார்கள். மக்கள் வெள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை கண்டு எதிர்க்கட்சிகள் கலங்கிப்போய் இருக்கின்றன. குறிப்பாக தி.மு.க. மிரட்சி அடைந்துள்ளது. விரக்தி அடைந்துள்ளது. எனவே தான் தி.மு.க.வினர் தற்போது, அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா பிரதமர் ஆக முடியாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதாவது, அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை தி.மு.க.வினரே உணர துவங்கிவிட்டனர்.
கோவை மாவட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் சாபம் இடுவதாக கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பதோ, அமைச்சர் பதவி என்பதோ முக்கியமல்ல. தமிழ்நாட்டிற்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதும், தமிழகத்திற்கு என்ன நன்மைகளை செய்ய முடியும் என்பது தான் எங்களது சிந்தனை. எனக்கு வரும் கூட்டத்தை கண்டு எதிர்க்கட்சிகள் மிரட்சி அடைவதிலோ, விரக்தி அடைவதிலோ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
விந்தையான ஆணை
ஆனால், இங்கு கூடுகிற கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது தான் எனக்கு வியப்பாக உள்ளது. அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நான் பிரசாரம் செய்யும் போது, அந்த தொகுதி வேட்பாளர் கலந்து கொள்ளக்கூடாது, மேடையில் இருக்கக்கூடாது, அவரது புகைப்படமும் இருக்கக்கூடாது, வேட்பாளரின் பெயரை கூட நான் உச்சரிக்க கூடாது, ‘‘இத்தொகுதியின் வேட்பாளர் இவர் தான்’’ என்று கூட நான் சொல்லக்கூடாது என்றெல்லாம் இதுவரையில் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விந்தையான ஆணைகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
அவ்வாறு மீறி வேட்பாளருடைய பெயரை நான் உச்சரித்தாலோ, அல்லது அவர் மேடையில் இருந்தாலோ அல்லது அவரது புகைப்படம் இருந்தாலோ, இந்தக் கூட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் தேர்தல் ஆணையம் வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடுமாம். வாக்காள பெருமக்களாகிய நீங்கள் உங்கள் சொந்த செலவில் வாகனங்களில் வந்து செல்லும் செலவும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. இது என்ன நியாயம்?.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், என்னை பொறுத்தவரையில், மேடை அமைப்பு, தோரணங்கள், பதாகைகள், கட்அவுட்டுகள், நாற்காலிகள் போன்ற செலவுகளை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், கூட்டம் அதிகமாக கூடுகிறது என்பதைக் காரணம் காட்டி, பொதுமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டு கூட்டத்திற்கு வரும் செலவை கூட வேட்பாளர் கணக்கில் சேர்ப்போம் என்று சொன்னால் அது எப்படி நியாயமாகும்?.
ஜனநாயகத்திற்கு எதிரான செயல்
ஒரு மக்களவை தொகுதி என்பது ஒரு மாவட்டத்திற்கு இணையானது. நான் ஒரு மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்கிறேன், ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறேன் என்றால் என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது உரையை கேட்க வேண்டும் என்ற விருப்பத்தில், அந்த தொகுதி முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தாங்களாகவே வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு அலை கடலென திரண்டு வருகிறார்கள். என்னைப்பார்க்க, எனது உரையை கேட்க வருகின்ற மக்கள் கூட்டத்தை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்?. இதை அ.தி.மு.க. நிர்வாகிகள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்?.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மக்கள் வர வேண்டும், அதற்கு மேல் வரக்கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும்? எப்படி தடுக்க முடியும்? இது எங்களால் இயலாத காரியம். மக்கள் ஆர்வத்திற்கு அணை போட முடியாது. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு எதிரான செயல்; ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கு விளக்க வேண்டும்
ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மக்கள் தாங்களாகவே தங்கள் சொந்த செலவில் வாகனங்களில் எனது கூட்டத்திற்கு வரும் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், நான் பேசும் கூட்டத்தில் எனது கட்சியின் வேட்பாளர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வேட்பாளர் மேடையில் நிற்க முடியாத சூழ்நிலையை, கூட்டத்திற்கு வர முடியாத சூழ்நிலையை, வேட்பாளரின் புகைப்படத்தை கூட ஒட்ட முடியாத சூழ்நிலையை, வேட்பாளர் பெயரை கூட உச்சரிக்க முடியாத சூழ்நிலையை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி விட்டது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி முதலில் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம் என்று அறிவித்ததாக செய்தி வந்தது. தற்போது இரவு 10 மணிக்கு பிறகு வீடுகளில் உள்ள வாக்காளர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களின் வீடுகளுக்கு சென்று வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியும் என்றும், கதவைத்தட்டி பிரசாரம் செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இவ்வளவு குழப்பம்?. இதுபோன்று, தினம் தினம் புதிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதால் அரசியல்வாதிகள் குழம்பி போயிருக்கிறார்கள். மக்களும் குழம்பி போய் இருக்கிறார்கள். தெளிவான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கலாமே.
மக்கள் விரும்பினால் பிரசாரம் செய்யலாம் என்றும், கதவை தட்டினால் புகார் அளிக்கலாம் என்றும் சொன்னால், அது எப்படி என்று யாருக்கும் புரியவில்லை. வீட்டின் கதவை தட்டிக்கேட்டால் தானே மக்கள் அதை விரும்புகிறார்களா, இல்லையா என்பது தெரியும்? என்னதான் செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் தெளிவாக மக்களுக்கு விளக்கவேண்டும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
நன்றி - தி.த