ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சாலையில் 13வது வார்டு உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த சாலை சென்னை -திருப்பதி செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாலான இடங்களில் இச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டது.
இதை சீரமைப்பதற்காக, கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊத்துக்கோட்டை காவல் நிலையம் அருகிலும், வணிக வரித்துறை சோதனைச்சாவடி எதிரிலும் தார் கலவைகள் கொட்டப்பட்டது. காவல் நிலையம் அருகே கொட்டப்பட்ட தார்கலவை இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது போல் கொட்டியுள்ளனர். காவல் நிலையத்திற்கு வருகிறவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல், வணிகவரித்துறை சோதனை சாவடியில் ஆந்திராவிலிருந்து வரும் கன ரக வாகனங்கள் தங்களது பெர்மிட் புத்தகத்தை கொடுத்து அனுமதி பெற்று தமிழக எல்லைக்கு செல்வார்கள். இதையொட்டி சாலையின் இரு புறமும் கனரக வாகனங்களை நிறுத்துவதால் பெரியபெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் இந்த பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. அதேபோல இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் தார்கலவைகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பள்ளங்களை சரிசெய்வது மட்டுமல்லாமல், சாலை ஓரம் கொட்டி வைத்துள்ள தார்கலவைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தி.க
No comments:
Post a Comment