சொந்த செலவில் குரங்குகளைப் பராமரித்து வரும் விவசாயி வெங்கடேசன்
மனிதர்களுக்கே ஒரு வேளை உணவளிக்க தயங்கும் மக்கள் மத்தியில் பூண்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது சொந்த செலவில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு தினமும் உணவளித்து வருகிறார்.
திருவள்ளூரை அடுத்த பூண்டியைச் சேர்ந்தவர் நீலமேகம் என்பவரது மகன் வெங்கடேசன் (35). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவியும், ரேஷ்மா, தருண் என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
பூண்டி பகுதி ஏரிக்கு மட்டுமல்ல, குரங்குகளுக்கும் பெயர்போன ஊர் ஆகும். பூண்டி அருகே வனப்பகுதி உள்ளதால் இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன.
காடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வன விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. காட்டில் போதிய உணவும், நீரும் இல்லாததே அவை ஊருக்குள் வர காரணம்.
அதேபோல், பூண்டி அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து ஏராளமான குரங்குகள் தற்போது உணவு தேடி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வரிகளுக்கேற்ப, ஒரு நாள் உணவு தேடி வரும் குரங்குகளுக்கு உணவுகள் வழங்கியிருக்கிறார் வெங்கடேசன்.
அதன் பின்னர், அவரைத் தேடி ஏராளமான குரங்குகள் வரத் தொடங்கிவிட்டன. அன்று முதல் அவற்றுக்கு உணவுகள் வாங்கிக் கொடுப்பதை அவர் வழக்கமாக்கிவிட்டார்.
தற்போது அவர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார்.
வெங்கடேசனுடன் குரங்குகள் மிகவும் அனியோனியமாக பழகி வருகின்றன.
இதனைக் கண்டு பூண்டி பகுதி மக்கள் வியப்பில் ஆழந்துள்ளனர். மேலும் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் குரங்குகளின் பசியைப் போக்கும் வெங்கடேசனை அவர்கள் பாராட்டியும் வருகின்றனர்.
இதுகுறித்து வெங்கடேசன் கூறியது: நாளுக்கு நாள் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் மரங்கள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன.
முன்பெல்லாம் கிராமங்களில் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்படும். வீடுகள்தோறும் வெளியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்.
உணவு மற்றும் தண்ணீருக்காக வரும் குரங்குகள் மரங்களில் உள்ள உணவை தன் தேவைக்கேற்ப உண்டுவிட்டு, வீடுகளின் முன்பு வைக்கப்பட்டுள்ள தண்ணீரை குடித்துவிட்டு யாருக்கும் தொல்லை கொடுக்காமல் சென்றன. ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லாததால், சாலையில் செல்வோர், தண்ணீர் பிடித்துச் செல்வோர் ஆகியோரை பயமுறுத்தி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
எனவே என்னால் முடிந்தவரை, கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு பழங்கள், பிஸ்கெட் போன்ற உணவுகளும், தொட்டியில் தண்ணீரையும் வழங்கி வருகிறேன்.
ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என வரத் தொடங்கிய குரங்குகள் தற்போது 100 வரை வரத் தொடங்கியுள்ளன.
நான் அவற்றின் உணவு நேரத்துக்கு இங்கு வந்து ஒரு விசில் ஊதுவேன். அதனைக் கேட்டவுடன் இப்பகுதியில் உள்ள குரங்குகள் வந்துவிடும். உணவினை அனைத்து குரங்குகளும் ஒற்றுமையாக உண்டுவிட்டுச் செல்லும்.
குரங்குகளை பராமரிக்க எனக்கு தினமும் ரூ.250 முதல் ரூ.300 வரை செலவாகிறது. இருப்பினும் எனது குடும்பத்தாரும் என்னை ஊக்கப்படுத்துகின்றனர்.
இதனைப் பார்க்கும் மக்கள், தாங்களும் விலங்குகளைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலே அதுவே எனக்கு திருப்தி என்றார் அவர்.
No comments:
Post a Comment