விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Monday, 7 April 2014

ஊத்துக்கோட்டையில் தொழில் அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த தையல்காரரை போலீசார் கைது


        காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு



ஊத்துக்கோட்டையில் தொழில் அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த தையல்காரரை போலீசார் கைது செய்தனர். ஆற்றங்கரையில் புதைத்து வைத்த 25 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32). தொழில் அதிபர். இவர், கடந்த மாதம் 22–ந் தேதி சிற்றப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் இறந்து விட்டதால் குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள், சுரேஷ் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வீட்டுக்கு திரும்பி வந்த சுரேஷ், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுரேஷின் தந்தை கோதண்டன், ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
தனிப்படை அமைப்பு
கைரேகை நிபுணர்கள் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை செய்த போது பீரோவின் கீழ் பகுதியில் ஒரு பெட்டி கிடந்தது. அதை திறந்து பார்த்த போது 20 பவுன் நகை இருந்தது. மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் அவசரத்தில் அந்த நகை பெட்டியை தவற விட்டு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. நகைகளை திருடியவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் நரேஷ், குமார், மனோகர், ஏட்டுகள் கர்ணன், கலையரசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை ஊத்துக்கோட்டை நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் கொடுத்ததால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தையல்காரர் கைது
அதில் அவர், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள பொம்மராஜூபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பிரேம்குமார்(32) என்பது தெரிய வந்தது. பிரேம்குமாருக்கு தையல் வேலை தெரியும். இவர், கொள்ளை நடந்த தொழில் அதிபர் சுரேஷ் வீட்டின் எதிரே உள்ள தையல் கடையில் கடந்த 2 வருடமாக வேலை செய்து வந்தார்.
கொள்ளை சம்பவம் நடந்த நாள் முதல் பிரேம்குமார் வேலைக்கு செல்லாமல் ஊத்துக்கோட்டையில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்தார் என்பது விசாரணையில் தெரிந்தது. மேலும் தொழில் அதிபர் வீட்டில் நகைகள் திருடியதையும் பிரேம்குமார் ஒப்புக்கொண்டார். சுரேஷ் குடும்பத்துடன் உறவினர் வீட்டு சாவு நிகழ்ச்சிக்கு செல்வதை அறிந்து கொண்ட பிரேம்குமார் தனது கைவரிசையை காட்டி உள்ளார். இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.
நகைகளை கைப்பற்றினர்
திருடிய நகைகளில் 22 பவுன் நகைகளை பையில் வைத்து ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் மண்ணில் புதைத்து வைத்து உள்ளதாகவும், மீதி உள்ள 3 பவுன் தங்க சங்கிலி திருவள்ளூரில் உள்ள நண்பர் மூலம் ஒரு அடகு கடையில் விற்று செலவு செய்து வந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து ஆற்றங்கரையில் புதைத்து வைத்த 22 பவுன் நகைகள் மற்றும் அடகு கடையில் விற்ற 3 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் கைதான பிரேம்குமாரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பிரேம்குமார் ஆந்திராவில் உள்ள புத்தூர், நாகலாபுரம், சத்தியவேடு ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தி.த

No comments:

Post a Comment